மலச்சிக்கல் – காரணங்களும் தீர்வுகளும் (Constipation – Causes and Remedies)

மலச்சிக்கல்

மலச்சிக்கல்  பற்றி தெரியாதவர் இருக்க முடியாது.

மலச்சிக்கல்தான் பொதுவாக எல்லா நோய்களுக்கும் காரணமாக உள்ளது.

மலச்சிக்கல்  உடலின்  பல பாகங்களில் சிக்கல்களை  ஏற்படுத்துகின்றது.

மலச்சிக்கல்  இல்லாத போதே உடல் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

மலச்சிக்கலை சரி செய்தால் பல நோய்கள் தீர வாய்ப்பு உள்ளது.  

 

செரிமானம்

நமது உடலில் செரிமானம் நடைபெறும் முறையைப் பார்ப்போம். 
நம் வாயில் உணவு நன்கு மெல்லப்பட்டு உமிழ்நீருடன் கலந்து வினை புரியும்போது செரிமானம்  தொடங்குகிறது.

உணவை நன்கு மெல்லாமல் விழுங்குபவர்களுக்கு  செரிக்கும் திறன் குறைவாக இருக்கும். வயிற்றிலுள்ள  உணவு, அமிலங்களுடன்  கடையப்பட்டு, சிறு குடலுக்குச் செல்கிறது.

அமிலத்தன்மை அதிகமாகும்போது, நெஞ்செரிச்சல் (Acidity) ஏற்பட்டு செரிமானம் பாதிக்கப்படுகிறது.

அமிலத்தன்மையுடன் சிறுகுடலுக்கு வரும் உணவு, காரத்தன்மையுடைய கணைய நீர், பித்தநீர்  இவற்றுடன்  சிறுகுடலில் சுரக்கும் பல என்ஸைம்களுடன்  கலந்து, அமிலத்தன்மை இழந்து, நடுநிலை அடைந்து  உணவின் சத்துக்கள்  உட்கொள்ளப்பட்டு கழிவுகள்  பெருங்குடலுக்குள்  தள்ளப்படுகின்றன.

பெருங்குடலில்  இக்கழிவுகளில் உள்ள  நீர் உறிஞ்சப்பட்டு மலமாக வெளியேறுகிறது.

 

மலச்சிக்கல் – காரணங்களும் தீர்வுகளும் :

வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு உறுப்புகளும் உணவை செரிமானம் செய்வதில் ஈடுபடுகின்றன. எந்த நிலையிலாவது சுணக்கமோ, தடையோ ஏற்பட்டால் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே, எல்லா உறுப்புகளும் நன்கு செயல்பட வைத்து செரிமானம் நன்கு நடைபெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

போதிய அளவு  தண்ணீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில்  நிறைய  நீர் அருந்த வேண்டும். இரவில் வெதுவெதுப்பான நீர் அருந்தலாம்.

நார்ச்சத்து குறைவாக உள்ள உணவை எடுத்துக்கொள்வதாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஜாம், க்ரீம், துரித உணவுகள் (Fast Food), பேக்கரியில் உள்ள தின்பண்டங்கள் (Biscuits, bread, cake), அடைக்கப்பட்ட உணவுகள் (Packed Food, Junk Food)  இவை மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

நார்ச்சத்துகள் அதிகம் உள்ள கேழ்வரகு, கோதுமை, கொள்ளு, தினை, வரகு, போன்ற தானிய உணவு வகைகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது மலச்சிக்கலுக்கு நல்லது. சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும்.

போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், வயதானவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். வயதானவர்கள் அதிக சத்துள்ள நார்ச்சத்துள்ள  உணவுகளான  காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவரவர் வயதிற்கேற்ப  நடைப்பயிற்சி, எளிய உடற்பயிற்சிகள்  செய்யலாம்.

முன்புறமாக குனிந்து பாதங்களைத் தொடும் பயிற்சி செய்யலாம். இதனால், அடிவயிறு அழுத்தப்படும்போது மலம் கீழுக்குத் தள்ளப்படும்.

கழிவறையில் அமர்ந்து கழுத்துப் பயிற்சி செய்தால் மலம் இறங்கி வரும். தலையை முன்னும் பின்னும் பக்கவாட்டில் திருப்பும் பயிற்சி செய்யும்போது, எளிதாக மலம் கழிக்க முடியும்.

வேலை பளுவால் மலம் கழிக்கும் எண்ணம் இருப்பினும், அதை சிலர்  அடக்கி வைத்துக் கொள்வார்கள். இதனால், மலம் உள் தள்ளப்பட்டு மலச்சிக்கலை உருவாக்கும். மலம் கழிக்கும் எண்ணம் வந்தவுடன் கழிவறைக்கு சென்று விட வேண்டும். காலைக்கடன்களில் மலம் கழித்தலை முக்கிய கடமையாக  நினைக்க வேண்டும்.

குடல் பகுதிகள் பாதிக்கப்பட்டால் மலச்சிக்கல் ஏற்படும். இதற்கு மருத்துவ ஆலோசனை பெறுதல் நலம்.

மலமிளக்கி மருந்துகள் சில நாட்களுக்குத்தான் பலன் தரும். எனவே மலச்சிக்கல் ஏற்பட்ட உடனே மலமிளக்கி மருந்துகளை  எடுத்துக்கொள்வது தவறு. இம்மருந்துகளால் குடல் பலவீனமடையும்.  உடலில் சத்துகளை உட்கிரகிக்கும் சக்தி குறைந்து விடும். ஆகவே, இம்மருந்துகளைத் தவிர்த்து இயற்கையான முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

எளிமையான கைவைத்திய முறைகளைக் கொண்டும், திரிபலா சூரணம், ஆளிவிதைகள், கொய்யா போன்றவை பயன்படுத்தியும் மலச்சிக்கலை போக்கலாம்.

 

மலச்சிக்கலை சரி செய்யும் சில ஆசனங்கள் :

கீழ்க்குறிப்பிட்டுள்ள சில ஆசனங்கள் செய்து வந்தாலும் மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளலாம்.

ஹலாசனம் (Halasana)

பவனமுக்தாசனம் (Pawanmuktasana)

தனுராசனம் (Dhanurasana)

திரிகோணாசனம் (Trikonasana)

சாவாசனம் (Savasana) 

பாலாசனம் (Balasana) 

 

அக்குபிரஷர்  சிகிச்சை :

நம் உடலின் 12 முக்கியமான உறுப்புகளும் 12 மெரிடியன்களால் இணைக்கப்பட்டுள்ளன. இதன் வழியே 24 மணி நேரமும் சக்தி பாய்கிறது. பெருங்குடல் மெரிடியனில் சக்தி பாயும் நேரம் காலை 5 மணி முதல் 7 மணி வரை. எனவே, காலை 6 முதல் 7 மணிக்குள் நாம் மலம் கழிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நல்லது. இந்த நேரத்தில் மலம் கழிப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

காலையில் எழுந்தவுடன் தண்ணீர்  குடித்துவிட்டு  வீட்டிலேயே சிறிது நேரம் நடக்கலாம். தொப்புளுக்கு கீழே 2 விரற்கடை அளவு தள்ளி உள்ள புள்ளியிலும், பக்கவாட்டில் இருபுறங்களிலும் 3 விரற்கடை அளவு தள்ளி உள்ள புள்ளிகளிலும், வாய்க்குக் கீழே முகவாயில் உள்ள புள்ளியிலும் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும்.

ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசிப் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்புள்ளியை தினமும் காலையிலும், மாலையிலும் சிறிது நேரம் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். இரு கைகளிலும் செய்ய வேண்டும். இதனால் மலச்சிக்கல், வாயுத் தொல்லை, நெஞ்செரிச்சல் ஆகியவை குணமாகும்.

 

மலச்சிக்கலால்  தலைவலி, ஒற்றைத்தலைவலி, பசியின்மை, தூக்கமின்மை, வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், மந்தம், உடல் நாற்றம், மூல நோய், பௌத்திரம், சிறுகுடல் புற்றுநோய் போன்ற பல பிரச்சனைகளும், பக்க விளைவுகளும் ஏற்படும்.  எனவே, மலச்சிக்கலை  அலட்சியமாக விட்டு விடாமல், சரி செய்து, தீர்வு காண வேண்டும். இல்லையேல் அதுவே பல்வேறு நோய்களுக்கு காரணமாகி விடும்.

எனவே, பல சிக்கல் தரும்  மலச்சிக்கலை சரி செய்து, உடல்நலத்தை பேணிக் காப்பீர்.

About noblekannan 16 Articles
Chennai-India

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*